ஆம் ஆத்மி இன்னும் பிறக்கவே இல்லை; பாஜகவுடன் தான் தேர்தலில் போட்டி - காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
பல்வேறு மாநிலங்களில் காங்கிரசை பலப்படுத்தும் விஷயத்தில் கட்சி தலைவர் சோனியா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருந்துவந்த காங்கிரஸ், நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களில் காங்கிரசை பலப்படுத்தும் விஷயத்தில் கட்சி தலைவர் சோனியா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு நடவடிக்கையாக, தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் இமாசலபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, “ தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.
ஆம் ஆத்மி கட்சி இன்னும் இமாசலபிரதேச மாநிலத்தில் பிறக்கவில்லை, முதலில் அந்த கட்சி பிறந்து அதன்பின் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
இமாசலபிரதேச தேர்தலை பொறுத்தவரை, எங்கள் போட்டி பாஜகவுடன் தான்” என்றனர்.