சொமேட்டோவின் "10 நிமிடத்தில் டெலிவரி" திட்டத்தை எதிர்க்கும் வாடிக்கையாளர்கள்! சொமேட்டோ நிறுவனர் விளக்கம்

இந்த புதிய வசதியால் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

Update: 2022-03-22 10:55 GMT
புதுடெல்லி,

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில், வீட்டில் டெலிவரி செய்யப்படும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால், இந்த புதிய வசதியால் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

அவசர அவசரமாக டெலிவரி செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி செல்லும் நிலை உருவாகும். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறுகையில், 10 நிமிட டெலிவரி சேவை "குறிப்பிட்ட அருகிலுள்ள இடங்கள், பிரபலமான மற்றும் தரப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே” என்று தெரிவித்தார்.

அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, “10 நிமிட டெலிவரி எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி நான் உங்களுக்கு மேலும் சொல்ல விரும்புகிறேன், 30 நிமிட டெலிவரியைப் போலவே எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு இது எப்படி பாதுகாப்பானது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவும்.
பொருட்களை தாமதமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் இல்லை. சரியான நேரத்தில் டெலிவரி செய்வதற்கு ஊக்கத்தொகையும் கொடுக்கப்போவது இல்லை.

சாலைப் பாதுகாப்பு குறித்து எங்கள் விநியோக ஊழியர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கற்பித்து வருகிறோம். ஊழியர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருப்பிடங்களுக்கு மட்டும், 10 நிமிட சேவையை வழங்குவதற்காக, புதிய உணவு நிலையங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 10 நிமிட டெலிவரி மூலம் ஒரு ஆர்டருக்கு சாலையில் செலவழிக்கப்படும் நேரம் குறையும்” என்று தெரிவித்தார்.

சொமேட்டோவின் அதிவேக சேவையை 2 நிமிடங்களில் தயாராகும் மேகி நூடுல்ஸ் உடன் ஒப்பிட்டு வெளியாகும் மீம்ஸைக் அவர் குறிப்பிட்டுள்ளார். “எங்கள் 10 நிமிட உணவு நிலையங்கள் மூலமாக நாங்கள் உங்களுக்கு மேகியை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
    
வாடிக்கையாளர்கள் 10 நிமிடங்களில் என்னென்ன பொருட்களை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு, “ரொட்டி, பிரெட், ஆம்லெட், போஹா, காபி, டீ, பிரியாணி, மோமோஸ் போன்ற உணவுப்பொருட்களை டெலிவரி செய்வோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சொமேட்டோ வாடிக்கையாளரும் சைபர் பாதுகாப்பு நிபுணருமான ஜிதன் ஜெய்ன் கூறுகையில், “ஒரு வாடிக்கையாளராக 10 நிமிட டெலிவரி என்பது எனக்கு இனிப்பான செய்தி. ஆனால், இது நிச்சயமாக உங்கள் டெலிவரி ஊழியர்களை பதட்டமாகவும் பொறுப்பற்றவராகவும் மாற்றும். நம் வீட்டு வாசலை தேடி வரும் சுவையான உணவுக்காக 30 நிமிடங்கள் பொறுமையாக காத்திருக்கலாமே” என்றார்.

மேலும் செய்திகள்