டெல்லியில் இலவச ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடம்; கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் 14 ஏக்கர் பரப்பளவில் இலவச ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லியின் ஜரோடா காலன் பகுதியில், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பெயரில் ஆயுத படையில் சேருவதற்கு தயாராகும் பயிற்சி அளிக்க கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளது.
14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த பள்ளியில், ஆயுத படையில் சேர மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்த பள்ளியில் பயில்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக விடுதிகள் இருக்கும்.
டெல்லியில் படிக்கும் எந்தவொரு மாணவரும் இந்த பள்ளியில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேரலாம். ஒவ்வொரு வகுப்பிலும் தலா 100 இடங்கள் இருக்கும். நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்கும். அதற்காக 18 ஆயிரம் விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.