இந்தியா-ஆஸ்திரேலியா “பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்” முன்கூட்டியே முடிவுக்கு வர வேண்டும் - பிரதமர் மோடி
இருநாடுகளின் பொருளாதார பாதுகாப்பிற்காக, இருதரப்பு “விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்(சிஇசிஏ)” விரைவில் முன்கூட்டியே முடிவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.
முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது காணொலிக் காட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பேசியதாவது,
இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இருநாடுகளின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக, இருதரப்பு “விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்(சிஇசிஏ)” விரைவில் முன்கூட்டியே முடிவுக்கு வர வேண்டும்.
இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனிம வளங்கள், நீர் மேலாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம், கொரோனா தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது திருப்திகரமாக உள்ளது.
குவாட் அமைப்பில் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. எங்களின் இந்த ஒத்துழைப்பு, சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதி மீதான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. குவாட் அமைப்பின் வெற்றி உலகளாவிய நிலைத்தன்மைக்கு முக்கியமானது. சீனாவுடனான இந்தியாவின் உறவுகளை
இயல்பாக்குவதற்கு கிழக்கு லடாக் பகுதியில் அமைதி நிலவுவது அவசியம்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்கு மிக்க நன்றி. கொரோனா பெருந்தொற்றின் போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்களின் நலனில் அக்கறை செலுத்தியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் செழிப்புக்கு இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வது அதிகரித்து வருவது குறித்து இருதலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் விரிவான சிறப்பு கவனம் செலுத்துவது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, இருநாட்டு பிரதமர்களுக்கு இடையே வருடாந்திர மாநாடுகளை நடத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதன்மூலம் இருதரப்பு உறவுகளில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று
தெரிவிக்கப்பட்டது.