மணிப்பூர் முதல் மந்திரியாக பைரேன் சிங் பதவியேற்பு

மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன், பைரேன் சிங்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2022-03-21 10:15 GMT
இம்பால், 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 10-ந்தேதி வெளியாகின. இதில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது.

இது தொடர்பாக கடந்த 10 நாட்களில் இருவரும் 2 முறை டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வந்தனர். இந்த உட்கட்சி பூசலால் மணிப்பூரில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் மணிப்பூரின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று காலையில் தலைநகர் இம்பாலில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், துணை பார்வையாளர் சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.  பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) பைரேன் சிங் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, மணிப்பூர் கவர்னர்  இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பைரேன் சிங் உரிமை கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மணிப்பூர் முதல் மந்திரியாக பைரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார். 

மேலும் செய்திகள்