ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் சிங், ராகவ் சந்திரா பெயர்கள் பரிந்துரை..!!
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்காக ஹர்பஜன் சிங் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான், கடந்த 16 ஆம் தேதி, பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 31 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
இதில் ஐந்து இடங்கள் தற்போது காலியாக உள்ளன. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சந்திரா, ஐஐடி இயற்பியல் பேராசிரியர் சன்தீப் பதக் மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல்ஆகியோரின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக அக்கட்சி தேர்வு செய்துள்ளது.