குடும்ப தகராறில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: குழந்தைகள் பலியான சோகம்
குடும்ப தகராறில் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்ததில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் உள்ள தியோரியைச் சேர்ந்த மம்தா தேவி (வயது 25) என்ற பெண் குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பாசன கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் தாய் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய 5 வயது மகள் சுஹானி மற்றும் 2 வயது மகன் சிக்குவுடன் வீட்டை விட்டு வெளியேறிய மம்தா தேவி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இரவு ஒரு மணியளவில் அந்த கிராமத்தில் உள்ள பாசன கிணற்றில் குதித்துள்ளார். குழந்தைகளுடன் வீட்டை வீட்டு வெளியேறிய மம்தாவை அவரது குடும்பத்தினர் தேடினர்.
இந்த நிலையில் மம்தா இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தது தெரியவந்தது. இதையடுத்து ஊர்மக்கள் கிணற்றில் குதித்த மம்தாவையும் குழந்தைகளையும் மீட்டு கிராமத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். ஆனால் மம்தா மட்டும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.