மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன - பிரதமர் மோடி
மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோலிக்கோடு,
மலையாள முன்னணி நாளிதழ் ஒன்றின் நூற்றாண்டு விழாவை இணைய வழியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வி.முரளீதரன் மற்றும் கேரள சுற்றுலாத்துறை மந்திரி பி.ஏ. முகமது ரியாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார். மேலும் அவர், ஊடகங்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் கண்டிருக்கிறேன். அதற்கு சிறந்த உதாரணமாக தூய்மை இந்தியா திட்டத்தை கூற முடியும். ஒவ்வொரு ஊடகமும் இந்த திட்டத்தை மிகுந்த நேர்மையுடன் எடுத்துச் சென்றது.
மேலும் யோகா, உடற்பயிற்சி மற்றும் 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' போன்ற திட்டங்களை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஊடகங்கள் அரசியலுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டவை. அவை வருங்காலத்தில் சிறந்த தேசத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உலகம் இந்தியாவிடம் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது என்று கூறினார்.