வரி செலுத்தாத கடைகள் முன் மொத்த குப்பைகளையும் கொட்டிச் சென்ற நகராட்சி ஊழியர்!

ஆந்திரபிரதேச மாநிலம், கர்னூலில் குப்பை வரி செலுத்தாதவர்களின் கடைகள் முன், நகராட்சி ஊழியர் குப்பைகளை கொட்டிச் சென்றார்.

Update: 2022-03-17 03:09 GMT
காட்சிப்படம்
கர்னூல், 

ஆந்திரபிரதேச மாநிலம் கர்னூல் நகராட்சியில் குப்பை வரி செலுத்தாதவர்களின் கடைகள் முன், நகராட்சி ஊழியர் குப்பைகளை கொட்டிச் சென்றார். இதற்கு கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருக்கும் ஒவ்வொரு கடைகளிலும் குப்பையை அள்ளிச் செல்ல மாத கட்டணமாக ரூ.100 முதல் 500 வரை வசூல் செய்யப்படுகிறது. இதற்காக தனியார் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

நேற்று கர்னூலில் உள்ள பஜார் தெருவில் வார்டு செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு கடையாக சென்று வரி வசூலித்து வந்தனர்.அப்போது சில கடைக்காரர்கள், சொத்து வரி, குழாய் வரி மற்றும் டிரேட் லைசென்ஸ் கட்டணம் போன்றவை செலுத்தும்போது எதற்காக குப்பை வரி செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். 

இதனால் கோபமான நகராட்சி ஊழியர், வெவ்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொண்டு வந்து பஜார் தெருவில் கேள்வி கேட்டவர்களின் கடைகளின் முன் கொட்டி விட்டுச் சென்றார். 

இந்த செயலால் அதிர்ச்சியடைந்த வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர்,  நகராட்சி பணியாளரின் இத்தகைய மோசமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வணிகர் சங்கத்தினர் புகார் எழுப்பியதையடுத்து, அதிகாரிகள் வந்து குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்