இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் இ-விசா..!
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் இ-விசா வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான 5 ஆண்டு இ-விசா மற்றும் வழக்கமான சுற்றுலா விசா சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.
‘தகுதியுள்ள 156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்திய இ-விசா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 156 நாடுகளுக்கான, தற்போதைக்கு செல்லுபடியாகும் ஈ-விசாக்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன’ என்று அரசின் அதிகாரப்பூர்வ விசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுலா அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ‘நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் இந்திய பயணத்துக்கான காத்திருப்பு முடிவடைந்துவிட்டது. சர்வதேச பயணிகளுக்கான இந்தியாவுக்கான இ-சுற்றுலா விசா, வழக்கமான சுற்றுலா விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பயணத்துக்கு தயாராகுங்கள்’ என்று கூறியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு ஊக்கமாக அமையும் என்று கருதப்படுகிறது.
அரசின் முடிவை வரவேற்றுள்ள சுற்றுலாத் துறையினர், இந்தியா பயணத்துக்கு பாதுகாப்பான நாடு என்ற நம்பிக்கையை வெளிநாட்டவர்கள் மத்தியில் இது ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.