குழந்தையை வளர்க்க ஆண்களுக்கும் விடுமுறை - ஜோதிர் ஆதித்ய சிந்தியா யோசனை
பெண்களுக்கு பிரசவகால விடுமுறை போல் குழந்தையை வளர்க்க ஆண்களுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு பேறுகால திருத்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.
அதை விமான நிறுவனங்களும் பின்பற்றி, பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கி வருகின்றன. குழந்தையை வளர்க்கும் கடமையை ஆண் ஊழியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், அவர்களுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து விமான நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும்.
நாட்டில் மொத்த விமானிகளில் பெண் விமானிகள் 15 சதவீதம் உள்ளனர். அவர்களை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.