ஆட்டம் இன்னும் முடியவில்லை; பாஜக-விற்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாஜக-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா,
இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்கள் நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகமாக நடத்தப்படுகின்றன.
1971 ஆம் ஆண்டின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநில சட்டமன்றங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன.
இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாஜக-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளுக்கு கடந்த முறை இருந்ததை விட இந்த முறை அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட பாஜக-விற்கு இல்லாததால் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக பாஜக வெற்றி பெற்று விடமுடியாது. எனவே ஆட்டம் இன்னும் முடியவில்லை.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.