“லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” - உ.பி. அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை பரிசீலித்த நீதிபதி, லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு, அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைக் கவனத்தில் கொண்ட தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கில் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உ.பி. மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் 24ம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது.