ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி: உடுப்பி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.

Update: 2022-03-15 15:51 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் இஸ்லாமிய மத மாணவிகள் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத சட்டத்தில் அவசியமானது இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும். 

ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மத மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஹிஜாப் வழக்கில் இன்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம், கொண்டாட்டங்கள், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் உடுப்பி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.  

பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட்டாலும், அமலில் உள்ள 144 தடை உத்தரவு மற்றும் பொதுஇடங்களில் போராட்டம், கொண்டாட்டங்கள், கூட்டம் கூட விதிக்கப்பட்ட தடை வரும் 21-ம் தேதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்