தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை அவமதிப்பு பிரசாரம் செய்ய சதி நடக்கிறது - பிரதமர் மோடி

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை அவமதிப்பு பிரசாரம் செய்ய சதி நடக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-15 10:53 GMT
புதுடெல்லி,

காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.   

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோ இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களும் இந்த படத்திற்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாஜக பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ள ஒட்டுமொத்த கும்பலும் கடந்த 5-6 நாட்களாக தீவிரமாக உள்ளன. 

திரைப்படத்தை (தி காஷ்மீர் ஃபைல்ஸ்) உண்மை மற்றும் கலை குறித்து விமர்சனங்கள் செய்வதை விட்டுவிட்டு திரைப்படம் தொடர்பாக அவமதிப்பு பிரசாரம் செய்ய சதி நடக்கிறது. எனது கவலை திரைப்படமல்ல. உண்மையை சரியான முறையில் வெளிக்கொண்டுவருவது நாட்டிற்கு நல்லது என நான் நம்புகிறேன். இது பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கலாம். சிலர் ஒன்றை பார்க்கலாம். மற்றவர்கள் மற்றொன்றை பார்க்கலாம். 

இந்த திரைப்படம் சரியானதல்ல என நினைப்பவர்கள் அவர்கள் சொந்தமாக திரைப்படம் உருவாக்கலாம். யார் அவர்களை தடுப்பது? பல ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்த உண்மை தற்போது வெளியே வந்ததால் அவர்கள் ஆச்சரியமடைந்திருப்பார்கள். உண்மைக்காக வாழ்பர்கள் இதுபோன்ற சமயங்களில் உண்மையுடன் சேர்ந்து இருக்க பொறுப்பானவர்கள் ஆவர்’ என்றார்.  

மேலும் செய்திகள்