ஹிஜாப் விவகாரம்: கர்நாடக ஐகோர்ட் உத்தரவுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் வரவேற்பு

முஸ்லிம் பெண்களை வீட்டின் 4 சுவர்களுக்குள் அடைத்து வைக்கும் முயற்சிகள் தோல்வியடையும் என தான் நம்புவதாக கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-15 10:49 GMT
பெங்களூரு,

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு  அளிக்கப்பட்டது. அதில், ஹிஜாப் அணியும் வழக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் அத்தியாவசியமானதாக கருத முடியாது. எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், “ஹிஜாப் அணியும் விவகாரத்தில் அரசு பிறபித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. அனைத்து மாணவர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் சீருடைகளை அணிந்து வரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் பெண்களை, குறிப்பாக முஸ்லிம் பெண்களை வீட்டின் 4 சுவர்களுக்குள் அடைத்து வைக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் என நான் நம்புகிறேன். மேலும் அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “இந்த தீர்ப்பு குறித்து நான் பெரிய அளவில் மகிழ்ச்சியடைவில்லை. ஏனெனில் நாட்டை கட்டமைப்பதிலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் மற்ற சகோதரிகளைப் போல, இஸ்லாமிய பெண்களுக்கும் மிகுந்த திறமை உள்ளது என நான் நம்புகிறேன். அவர்கள் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்கள் யாவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஹிஜாப் விவகாரம் குறித்த சர்ச்சை எழுந்த போது, கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், “இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான பழக்கவழக்கம் இல்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்