டெல்லி வன்முறை: சிறையில் உள்ள காங். முன்னாள் கவுன்சிலருக்கு ஜாமீன்

டெல்லி வன்முறையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

Update: 2022-03-14 14:08 GMT
புதுடெல்லி,

குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தலைநகர் டெல்லியில் 2020 பிப்ரவரி 23-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், டெல்லி வன்முறையில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், வன்முறையை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இஷ்ரத் ஜகான் என்ற பெண் 2020 பிப்ரவரி 26-ம் தேதி டெல்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வன்முறையை தூண்ட சதித்திட்டம் தீட்டியதற்காக இஷ்ரத் ஜகான் மீது ஊபா (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகானுக்கு டெல்லி கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இஷ்ரத் ஜகான் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் நடத்திய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இஷ்ரத் ஜகான் நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்