அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபாடு செய்த அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான்..!!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்காக பொற்கோவிலுக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் வழிபட்டனர்.
அமிர்தசரஸ்,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.
இதன்படி பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி அம்மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் காலானில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே பஞ்சாபில் பெரும்பான்மைக்கும் மிக அதிகமான தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பறியதற்கு, தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று அமிர்தசரசில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் நிர்வாகிகள் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபாடு செய்தனர். இதனையடுத்து பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து துர்கியானா கோவிலில் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.