இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2022-03-13 03:25 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 ம்ாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின.

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம், டெல்லி ஜன்பாத்தில் உள்ள  கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்