யுகாதி பண்டிகைக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை மாற்றம் - பசவராஜ் பொம்மை திட்டம்

யுகாதி பண்டிகைக்கு பின்பு கர்நாடக மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-03-13 00:03 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த மாதம் (பிப்ரவரி) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது மந்திரிசபையை மாற்றியமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தோ்தல் நடைபெற்றதால், மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் நிறைவு பெற்றிருப்பதால் கர்நாடகத்தில் மீண்டும் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தோ்தலை கணக்கில் கொண்டு மந்திரிசபையை மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

அதன்பிறகு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு வைத்து மந்திரிசபையை மாற்றியமைப்பதா? அல்லது மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? என்பது குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. மேலிட தலைவர்கள் அனுமதி அளித்த பின்பு அடுத்த மாதம் யுகாதி பண்டிகைக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை மாற்றியமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்