அவுரங்காபாத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

அவுரங்காபாத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-12 22:59 GMT
மும்பை,

அவுரங்காபாத்தில் 83.18 சதவீத மக்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். இதேபோல 55.38 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே தடுப்பூசி போடாதவர்களை, போட வைக்கும் வகையில் அவுரங்காபாத்தில் மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதன்படி இனிமேல் தடுப்பூசி போடாதவர்களுக்கு அங்கு பெட்ரோல் வழங்கப்படாது. மாவட்ட நிர்வாகம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் டீலர் சங்க செயலாளர் அக்யூல் அப்பாஸ் கூறுகையில், " எங்களுக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் கொரோனா சான்றிதழ் சோதனை நடத்த ஆட்களை தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு இருந்தோம். தற்போது இதற்காக பெட்ரோல் பங்குகளில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி போடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்த நடவடிக்கை மூலம் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவுரங்காபாத் மாவட்ட கலெக்டர் சுனில் சவான் கூறினார். மேலும் இலக்கை அடையும் வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்