மும்பை-நாக்பூர் புல்லட் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மத்திய மந்திரி தன்வே
மும்பை - நாக்பூர் புல்லட் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ராவ்சாகேப் தன்வே கூறியுள்ளார்.
மாநில அரசு 50 சதவீதம்
மராட்டிய மாநிலம் மன்மாடு முதல் முட்கேட் வரை உயரழுத்த ரெயில்வே மின்பாதை தூண்களை நேற்று ஜால்னா ரெயில் நிலையத்தில் ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
மராட்டியத்தில் பல்வேறு ரெயில்வே திட்டப்பணிகளை மேற்கொள்ள கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும் மாநிலத்தில் ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றவும், புதிய வழித்தடங்களை அமைக்கவும் தயாராக உள்ளது. அதே நேரத்தில் திட்டத்திற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.
புல்லட் ரெயில் திட்டம்
மும்பை - நாக்பூர் புல்லட் ரெயில் திட்டத்துக்கான மேம்பாட்டு திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. அது வந்தவுடன் விரைவில் மும்பை - நாக்பூர் திட்டப்பணிகள் தொடங்கும். இந்த திட்டம் மூலம் மும்பையில் இருந்து அவுரங்காபாத்துக்கு 1 மணி நேரம் 40 நிமிடங்களில் வர முடியும்.
கார்பன் வெளியேறுவதை தடுக்க நாடு முழுவதும் ரெயில்வேயை மின்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில்வே முனையம் (சி.எஸ்.எம்.டி) உள்பட நாடு முழுவதும் 75 ரெயில்நிலையங்கள் முதல் கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதேபோல நாடு முழுவதும் சரக்கு ரெயில் போக்குவரத்திற்கும் தனிவழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய மந்திரி பகவத் காரத், சஞ்சய் ஜாதவ் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.