ஒடிசாவில் பரபரப்பு: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயம்...!
சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 7 போலீசார் உட்பட சுமார் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
புவனேஸ்வர்,
நேற்று ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்ட சிலிகா எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவரை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த எம்.எல்.ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் சிகிச்சைக்காக புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டார். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிஜேடி எம்பி டாக்டர் சஸ்மித் பத்ரா கூறுகையில், “சிலிகா எம்எல்ஏவின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, இந்தச் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறையும் நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்”. என்று கூறினார்.
பிரசாந்த் ஜக்தேவ் கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக தலைவரை தாக்கியதாகக் கூறி பிஜேடி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.