மனம் தளராமல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் - தொண்டர்களுக்கு மாயாவதி ஆறுதல்
மனம் தளராமல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருந்தாலும் தொண்டர்கள் மனம் தளராமல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக உள்ளது. அதற்காக நாம் மனம் தளரக் கூடாது. அதற்குப் பதிலாக, அதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு, சுயபரிசோதனை செய்து, கட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
2017ம் ஆண்டுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு நல்ல பங்கு இல்லை. அதே போல் இன்று பாஜகவின் நிலையில் காங்கிரஸ் உள்ளது. உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு ஒரு பாடம்.
பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் 'பி' அணி என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அப்படியே இதற்கு நேர்மாறானது. பாஜகவுடனான பகுஜன் சமாஜ் கட்சியின் போர் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, கொள்கை ரீதியாகவும் தேர்தல் ரீதியாகவும் இருந்தது.'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.