சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் முதல்-மந்திரிகள்...!
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் முன்னாள் முதல்-மந்திரிகள் பலர் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.
இதில் பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சரண்ஜித் சிங் சன்னி பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். எனினும் இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் (20105 வாக்குகள்) ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் கோலியிடம் (33142 வாக்குகள்) தோல்வியைத் தழுவினார்.
பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து உத்தரகண்ட் மாநிலத்திலும் முதல்-மந்திரி பதவி வகித்தவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்டிடம் தோல்வியைத் தழுவினார்.
அதேபோல் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் புவன் கப்ரியிடம் தோல்வியைத் தழுவினார்.