4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக - பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி
5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும்.
அதேபோல், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் முன்னிலை நிலவரம்:
உத்தரபிரதேசம்:
403 தொகுதிகளில் 271 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேவேளை, சமாஜ்வாத் கட்சி 125 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளது.
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் சட்டசபையில் 70 தொகுதிகள் உள்ளன. அதில், பாஜக 44 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. மற்றவை 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
36 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் பாஜக 44 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உத்தரகாண்டில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளது.
பஞ்சாப்:
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அம்மாநிலத்தில் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியமைய உள்ளது.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் 6 தொகுதியிலும், பாஜக 2 தொகுதியிலும், மற்றவை 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
கோவா:
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் கோவாவில் பாஜக ஆட்சியை தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மணிப்பூர்:
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்ஹ்டில் பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மணிப்பூரிலும் பாஜக ஆட்சியை தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேவேளை மணிப்பூரில் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மற்றவை 24 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.