மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும்: நிர்மலா சீதாராமன்
2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மத்திய அரசு, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை வருகிற 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டிற்கு கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். இதேபோன்று பல மாநில அரசுகள் இந்த கோரிக்கை முன் வைத்தன. இது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஆலோசனை நடத்தி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுத்த முடிவு.
உக்ரைனில் நடந்து வரும் போரால் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சீர் செய்ய மாற்று வழிகளை இந்தியா தேடியுள்ளது. மலேசியா, இந்தோனேஷியா நாடுகளை போன்று தட்ப வெப்பநிலை உள்ள இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் சமையல் எண்ணெய், பாமாயில் உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்கு வித்து வருகிறோம். இதற்கான உதவிகளை விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்து வருகிறது என்று அவர் கூறினார்.