பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடு வழங்கப்படுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாரதி பிரவீண் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
‘உள்நாட்டு தயாரிப்புக்கு ஆதரவு’ என்ற முழக்கம், பொருளாதாரத்துக்கான முக்கிய அம்சமாக மாறி இருக்கிறது. அது பெண்கள் அதிகாரமயமாக்கலுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டது.
இதன் வெற்றி, பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஆகவே, உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த பொதுமக்களை பெண்கள் தங்கள் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊக்கப்படுத்த வேண்டும்.
உள்நாட்டு தயாரிப்பு என்றால், தீபாவளி விளக்கு வாங்கினால் போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்.
முன்பெல்லாம், பெண்கள் பெயரில் சொத்து இருக்காது. கணவர் பெயரிலோ அல்லது மகன்கள் பெயரிலோ தான் இருக்கும். ஆனால், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் வீடுகள் வழங்கப்படுவதால், அவர்கள் சொத்தின் உரிமையாளர்கள் ஆகி வருகிறார்கள்.
அதுபோல், முன்பு பெண்கள் பெயரில் வங்கி கணக்கு இருக்காது. ஆனால், தற்போது 23 கோடி பெண்கள் பெயரில் ‘ஜன்தன்’ வங்கி கணக்குகள் உள்ளன.
9 கோடி உஜ்வாலா சமையல் கியாஸ் இணைப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் விறகு அடுப்பு புகையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
பெண்கள் தங்களது கனவை நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. ‘ஸ்டாண்ட்அப் இந்தியா’ திட்டத்தில் 80 சதவீத கடன்கள் பெண்கள் பெயரில் வழங்கப்படுகின்றன. ‘முத்ரா’ திட்டத்தில் 70 சதவீத கடன்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்கள் முழுமையாக பங்கு பெறுவதை நாடு விரும்புகிறது என்று அவர் பேசினார்.