உக்ரைன் விவகாரம்; நெதர்லாந்து பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி
நெதர்லாந்து பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் ரூட்டோவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “போரை நிறுத்துவதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் அமைதி பாதைக்குத் திரும்புவதற்கும் இந்தியாவின் நிலையான வேண்டுகோளை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். ரஷியாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை பிரதமர் வரவேற்றார், மேலும் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்.
மோதல் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களுக்கான இந்தியாவின் உதவி குறித்தும் பிரதமர் மோடி பிரதமர் ரூட்டிடம் தெரிவித்தார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.