மத்திய பட்ஜெட்டை பெண் நிதி மந்திரி தாக்கல் செய்தது பெருமைக்குரியது- மகளிர் தினத்தில் பிரதமர் மோடி உரை
‘வளர்ச்சி மற்றும் லட்சிய பொருளாதாரத்திற்கான நிதி’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.
புதுடெல்லி,
‘வளர்ச்சி மற்றும் லட்சிய பொருளாதாரத்திற்கான நிதி’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் 16 அமைச்சகங்கள், நிதி ஆயோக், திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றன.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொள்கிறேன். பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நாம் நடத்தும் இந்த சமயத்தில், இந்தியாவுக்கு ஒரு பெண் நிதி மந்திரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம்’ என்றார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் விரைவான வளர்ச்சியின் வேகத்தைத் தொடர அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளிநாட்டு மூலதனங்களை ஊக்குவிப்பது, உள்கட்டமைப்பு முதலீட்டின் மீதான வரியைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த நாம் முயற்சித்து வருகிறோம்.
புதிய தொழில் துறைகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே புதிய தொழில் முனைவோர்கள் வளர முடியும். நிதித்துறையானது புதிய எதிர்கால யோசனைகள் மற்றும் நிலையான இடர் மேலாண்மை மீது கவனம் செலுத்த வேண்டும்.
2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை முழுவதுமாக நிறுத்தும் இலக்கை இந்தியா கொண்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவுபடுத்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை விரைவுபடுத்துவது அவசியம் என அவர் தெரிவித்தார்.