ராணுவ முகாமில் மீண்டும் இரு வீரர்களிடையே துப்பாக்கிச்சூடு! தமிழக வீரர் உட்பட 2 பேரும் பலியான சோகம்!

உயிரிழந்த இரு வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.நேற்று பஞ்சாபில் சக வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-03-07 10:33 GMT
கோப்புப்படம்
கொல்கத்தா,

எல்லை பாதுகாப்பு படை முகாமில், இரண்டு வீரர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சக வீரரை மற்றொரு வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள 117வது பாடாலியனின் காக்மாரி முகாமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

முன்னதாக, உள்ளூர் போலீசிடம் இருந்து இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஒரு விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய-வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள ஜலாங்கி முகாமில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரர்கள் இருவருக்குமிடையே சம்மன் அனுப்பப்பட்ட விவாகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த வாக்குவதம் முற்றியதில், சக வீரர் இன்னொரு வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த இரு வீரர்களில் ஒருவர்  தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு வீரர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அசம்பாவிதம் குறித்த விரிவான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
முன்னதாக, நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய காசா பகுதியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினர் குழுவில் சக வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்