குரூப் 1 தேர்வுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு; யுபிஎஸ்சி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு எழுதாத மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக 2020-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மத்திய,மாநில அரசுகளின் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்த பிறகு கடந்த ஆண்டு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது நடந்த தேர்வில் கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தேர்வு எழுதவில்லை.
இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்மாறு தேர்வு எழுதாத மாணவர்கள் கேட்டு கொண்டு இருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ரவிக்குமார் மற்றும் கான்வில்கார் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இது குறித்து முடிவு எடுக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.