உக்ரைன் அதிபரிடம் 35 நிமிடம் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி

உக்ரைன் அதிபரிடம் இந்திய பிரதமர் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Update: 2022-03-07 07:43 GMT
புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி உடனும் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு தலைவர்களிடையே 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. உக்ரைனில் நிலவி வரும் போர் சூழ்நிலை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினை தொடர்பாக உக்ரைன் ரஷியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க உக்ரைன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைன் அரசி தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கியிடம் மோடி கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்