ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்

ரஷிய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-03-07 05:28 GMT
புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் அது தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

புதினுடனான பேச்சுவார்த்தையின் போது உக்ரைனில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துதல், போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி உடனும் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரேநாளில் இருநாட்டு அதிபர்களுடன் இந்திய பிரதமர் மோடி பேச உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்