உக்ரைன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும்... இந்தியாவுக்கு ராஜதந்திரம் தெரியும்; ஜெர்மன் தூதுர் பதில்

உக்ரைன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ராஜதந்திரம் இந்தியாவுக்கு தெரியும் என்று இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் கூறியுள்ளார்.

Update: 2022-03-06 13:23 GMT

புதுடெல்லி,



பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசும்போது, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறோம் என கூறினார்.  கொரோனா பரவியபோது அதனை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். அதேபோல் இப்போது உக்ரைனில் உள்ள சூழ்நிலையையும் கையாள்கிறோம். மிகப்பெரும் நாடுகள் கூட உக்ரைனில் சிக்கி தவித்த தங்கள் நாட்டு மக்களை மீட்க சவால்களை சந்தித்தன. ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் அதிகரித்துவரும் செல்வாக்கினால் இந்தியர்களை மீட்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

அவரது பேச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கேள்வி ஒன்றிற்கு இன்று பதிலளித்து உள்ளார்.  உக்ரைன் மற்றும் ரஷிய போர் நெருக்கடியில் சர்வதேச அமைப்பில் இந்தியாவின் நிலை பற்றி அவர் பேசும்போது, இந்தியா சிறந்த ராஜதந்திர சேவையுடன் செயல்படுகிறது.  அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இது உக்ரைனையோ அல்லது ஐரோப்பிய யூனியனையோ அல்லது நேட்டோவை பற்றியது அல்ல.  சர்வதேச உறவுகளை பற்றியது.  நாம் அனைவரும் புதினுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.  வேண்டாம், இதனை நிறுத்துங்கள் என புதினிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று லிண்ட்னர் கூறியுள்ளார்.

கடந்த வாரம், ஐ.நா. அமைப்பில் கொண்டு வரப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதில் இருந்து இந்தியா ஒதுங்கி கொண்டது.  எனினும், அமெரிக்கா சார்பிலான இந்த தீர்மானம், தனது வீட்டோ அதிகார உதவியுடன் ரஷியாவால் தோல்வியடைய செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்