தமிழகம்-கர்நாடகம் இடையே நிலவும் மேகதாது விவகாரத்தில் இரு மாநில பேச்சுக்கு ஏற்பாடு செய்ய தயார்- கஜேந்திரசிங் ஷெகாவத்
மேகதாது விவகாரத்தில் தமிழகம்- கர்நாடகம் இடையே பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய தயார் என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை
இந்த மேகதாது அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவான வரைவுத்திட்ட அறிக்கை தயாரித்து கர்நாடகம், மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதில், இந்த அணை திட்டத்தால் பெங்களூரு நகருக்கு 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும், 400 மெகா வாட் மின்உற்பத்தி செய்வதும் நோக்கம் என கர்நாடகம் கூறியுள்ளது.
தமிழகம் எதிர்ப்பு
ஆனால் இந்த திட்டத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காது என்றும் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி கொடுக்காமல் உள்ளது. இதற்கிடையே கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், மேகதாது திட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என்று பாதயாத்திரை நடத்தியது. இதையடுத்து ஆளுங்கட்சியான பா.ஜனதா மேகதாது திட்ட பணிகளை தொடங்க ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்மாநில மாநாடு
இந்த நிலையில் நேற்று ஜல்ஜீவன் திட்டம் குறித்த தென்மாநிலங்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுகு்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பேச்சு நடத்தினால் தீர்வு
மேகதாது திட்டத்திற்கு கர்நாடக அரசு தனது பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிந்தேன். இது நல்லது தான். மேகதாது திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
ஆனால் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு கிடைக்கும்.
நதிகள் இணைப்பு
இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது என்னால் சொல்ல முடியாது. இதே போல் உத்தரபிரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீட்டு பிரச்சினை இருந்தது. அதாவது கென்-பெத்வா நதிகள் இணைப்பு குறித்த பிரச்சினை இருந்தது. இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து கொண்டன. அதனால் கர்நாடகம்-தமிழ்நாடு மாநிலங்கள் பேச்சுவார்த்தை மூலம் மேகதாது திட்ட பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி கிராமங்கள் மற்றும் நகரங்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரும் வரை 17 சதவீத கிராமங்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இது 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குடிநீர் இணைப்பு
இப்போது பிரதமர் மோடி ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டில் இதுவரை 3.27 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். பெங்களூருவில் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த மாநிலங்களுக்கு ரூ.21 ஆயிரத்து 842 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்திற்கு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.