உத்தரபிரதேசம்: சஹாரன்பூர்- டெல்லி பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து
சஹாரன்பூர்- டெல்லி பயணிகள் ரெயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகளில் திடீரென தீப்பற்றியது.
மீரட்,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா ரயில் நிலையத்தில் இன்று சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ரெயில் நின்றுகொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறினர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
ரெயில் இன்ஜினிலும் தீ விபத்து ஏற்பட்டதால், ரெயிலை இயக்க முடியாமல் போனது. இதனால் இஞ்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் இருக்க, பயணிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ரெயிலை தள்ளினர். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரெயிலில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.