கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும்- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
உக்ரைனில் உள்ள கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு சென்ற விமானங்களில் ‘முதல் விமானம்’ கடந்த 26-ஆம் தேதி பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது.
தொடர்ந்து ‘இரண்டாவது விமானம்’ 26-ஆம் தேதி இரவு வந்தடைந்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட ‘மூன்றாவது விமானம்’ கடந்த 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.
அதே போல் கடந்த 27 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்கச் சென்ற சிறப்பு விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளதாவது:
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக அடுத்த 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாட்டிற்கு செல்லவுள்ளன. எங்களது அறிவுரையின் பெயரில் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைன் எல்லையை கடந்து அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
உக்ரைன் நாட்டு அரசாங்கத்திடம் இந்திய மாணவர்களை மீட்பதற்காக சிறப்பு ரயில்களை இயக்கும்படி கேட்டு இருந்தோம். ஆனால் இதுவரை அதுபற்றி எந்த தகவலும் இல்லை. அதனால் நாங்கள் பேருந்துகளை இயக்குகிறோம்.
குறிப்பாக கார்கிவ் மற்றும் பிசோச்சின் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம் . 900-1000 இந்தியர்கள் பிசோச்சின் பகுதியில் இருக்கின்றனர் மற்றும் சுமியில் 700 பேர் சிக்கியுள்ளனர்.
உக்ரைனில் உள்ள கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும். வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரை மீட்டுள்ளோம். மேலும் நேபாள மக்களை மீட்கும் படி கோரிக்கை வந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.