உக்ரைன் போர்: வளர்ப்பு நாய்க்கு தடை; ஹங்கேரி வழியாக இந்தியா வந்த மாணவர்
உக்ரைனில் இருந்து செல்ல நாயை உடன் அழைத்து வர அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஹங்கேரி வழியாக இந்தியா வந்தடைந்து உள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது. இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
எனினும், உக்ரைனில் படித்து வந்த மாணவர் ஒருவர் தனது செல்ல பிராணியை உடன் அழைத்து வருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ரிஷாப் கவுசிக் என்ற மாணவர் கார்கிவ் தேசிய பல்கலை கழகத்தில் மென்பொருள் பொறியாளருக்கான பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்தியாவின் டேராடூன் நகரை சேர்ந்தவரான கவுசிக் தன்னுடன் மலிபூ என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பும்போது அதனையும் உடன் அழைத்து வர விரும்பியுள்ளார்.
ஆனால், அதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. செல்ல பிராணியை அழைத்துவர இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது வேதனையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இவரது வீடியோவை கண்ட விலங்குகளுக்கான நல அமைப்பு (பீட்டா), வளர்ப்பு பிராணிகளை விமானத்தில் தங்களுடன் அழைத்து வர இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு, விதிகளில் தளர்வு அளித்தது. இதன்படி, வளர்ப்பு பிராணிகளை இந்தியர்கள் அழைத்து வர அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 219 இந்தியர்களுடன் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் கவுசிக் தனது செல்ல நாயுடன் பயணித்து இந்தியா வந்தடைந்து உள்ளார்.