பெங்களூருவில் 13-வது சர்வதேச திரைப்பட விழா - பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் 13-வது சர்வதேச திரைப்பட விழாவை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 13-வது சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வெளிநாட்டு படங்களும் இதில் பங்கேற்றுள்ளன
இதன் தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“கன்னட திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டும் என்றால், மக்களின் மனங்களை வெல்லும் வகையில் படங்களை எடுக்க வேண்டும். திரைப்படங்களை எடுப்பதில் உயர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இந்த சர்வதேச திரைப்பட விழா சர்வதேச அளவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மனதை தொடும் கதையம்சங்கள் கொண்ட படங்களை இந்த விழாவில் வெளியிட வேண்டும்.
நடிகர் புனித் ராஜ்குமார் குறைந்த காலத்தில் திரைப்படத்துறையில் செய்துவிட்டு சென்றுள்ள சாதனை நமது மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் விரைவாக வருகிற ஆண்டிற்குள் முடிக்கப்படும். சினிமா இயக்குனர் புட்டண்ண ஹனகல் வாழ்ந்த இல்லம், நினைவு மண்டபமாக மாற்றப்படும்.இனி ஆண்டுதோறும் இந்த சர்வதேச திரைப்பட விழா மார்ச் 3-ந் தேதி தொடங்கப்படும். ஏனென்றால் இந்த தேதியில் தான் கன்னடத்தின் முதல் பேசும் படம் வெளியானது.”
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.