ஆபரேஷன் கங்கா; உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா சென்றது இந்திய விமானம்

இந்திய மாணவர்களை மீட்பதற்காக C-17 கிலோப்மாஸ்டர் என்ற விமானம் இன்று காலை 4 மணி அளவில் ருமேனியா புறப்பட்டு சென்றுள்ளது.

Update: 2022-03-02 05:12 GMT
புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.  மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

இவ்வாறு சென்ற விமானங்களில் ‘முதல் விமானம்’ கடந்த 26-ஆம் தேதி  பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது. 

தொடர்ந்து ‘இரண்டாவது விமானம்’  26-ஆம் தேதி இரவு வந்தடைந்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட  ‘மூன்றாவது விமானம்’ கடந்த 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. 

அதே போல் கடந்த 27 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்கச் சென்ற சிறப்பு விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

அந்த வகையில் ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்பதற்காக C-17 கிலோப்மாஸ்டர் என்ற விமானம் இன்று காலை 4 மணி அளவில் ருமேனியா புறப்பட்டு சென்றுள்ளது.

அதை தொடர்ந்து போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கும் அடுத்தடுத்து விமானங்கள் இயக்கப்படவுள்ளன  .

மேலும் செய்திகள்