உக்ரைன் விவகாரம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, உக்ரைன் நிலைமை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்கினார், இதன் போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஒருங்கிணைக்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் சிறப்பு தூதர்களாக செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மந்திரி ஹர்தீப் பூரி ஹங்கேரியில் இருப்பார், விகே சிங் போலந்தில் உள்ள வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வையிடுவார். ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை கவனித்துக்கொள்வார், அதே நேரத்தில் கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவில் உக்ரைனில் இருந்து நில எல்லைகள் வழியாக வந்த இந்தியர்களை வெளியேற்றுவதை நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். உக்ரைனுக்கு இந்தியா நிவாரணப் பொருட்கள் அனுப்ப உள்ள நிலையில் தற்போது ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.