வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு; இன்று முதல் அமல்
வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது.
புதுடெல்லி,
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது. எனினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 உயருகிறது. இந்த விலை உயர்வால், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் இன்று முதல் ரூ.2,012க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.27 உயருகிறது. இதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.569க்கு விற்கப்பட உள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை.
இதேபோன்று தமிழகத்தில் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது. எனினும் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் உயர்வில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியால் சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும்.