உத்தரபிரதேச மாநிலத்தை முன்னேற்றுவது எனது பொறுப்பு! - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி!
வளர்ச்சி என்னும் நெடுஞ்சாலையில் உத்தரபிரதேசம் என்ற வாகனம், சாதியின் தெருக்களில் சிக்கி கொள்ளாமல் பயணிக்கிறது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில தேர்தலில், மீதமிருக்கும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு, மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வம்சாவளியினரால்(வாரிசு அரசியல்) இந்தியாவை ஒருபோதும் திறமையானதாக மாற்ற முடியாது, உத்தரபிரதேசத்தை திறமையாக மாற்ற முடியாது. இவர்களை போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது.
கொரோனா காலத்தில், இந்தியாவின் நம்பிக்கையைப் புண்படுத்த அவர்கள் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை. உள்நாட்டு தடுப்பூசிகளுக்கு எதிராக நாட்டின் ஏழைகளை தூண்டிவிட முயன்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் வேகமாக மாறிவரும் உலகின் நிலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள். உலகம் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், இந்தியா சக்திவாய்ந்ததாக இருப்பது மிகவும் முக்கியம்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பல்லியாவில் நடைபெற்ற பிரசார மேடையில் பேசியதாவது,
உ.பி.,யின் 5 கட்ட தேர்தல்களில், உ.பி., மக்கள், வாரிசு அரசியலை நிராகரித்து, வளர்ச்சி என்னும் நெடுஞ்சாலையில் உத்தரபிரதேசம் என்ற வாகனம், சாதியின் தெருக்களில் சிக்கி கொள்ளாமல் பயணிக்கிறது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர்.
உஜ்வாலா என்ற இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் இங்கிருந்து தொடங்கப்பட்டதால், பல்லியாவுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை மேம்பாடு அடைய செய்வதே எனது முன்னுரிமையாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்வது எனது பொறுப்பு.
இவ்வாறு பிரதமர் மோடி பேசி வாக்கு பொதுமக்களிடம் சேகரித்தார்.