யூடியூப் பார்த்து பாலியல் மாற்று அறுவை சிகிச்சை: இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

யூடியூப் வீடியோவைப் பார்த்து இரண்டு பி பார்மா மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்றதால் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-02-27 10:34 GMT
நெல்லூர்,

ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் வியாழக்கிழமை அன்று ஒரு தனியார் லாட்ஜில் இரண்டு பி பார்மா மாணவர்கள் யூடியூப் டுடோரியலைப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்றதால் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்பதும், அவர் ஐதராபாத்தில் சிறு வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அந்த இரண்டு மாணவர்களிடம் (மஸ்தான் மற்றும் ஜீவா) தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரீகாந்த் இந்த சிகிச்சைக்காக மும்பை செல்ல விரும்பினார், ஆனால் அவர்கள் இருவரும் அவரை மலிவான விலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என சமாதானப்படுத்தினர்.

மூவரும் அறுவை சிகிச்சைக்காக தனியார் லாட்ஜில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இரண்டு மாணவர்களும் யூடியூப்- இல் ஒரு வீடியோவைப் பார்த்து சிகிச்சையை தொடங்கினர். துரதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சையின் போது, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக ஸ்ரீகாந்த் உயிரிழந்தார்.

லாட்ஜ் ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் இருந்த ஸ்ரீகாந்தை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர், அதன்பின் இந்த  சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் அந்த இரு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்தின் மரணத்திற்கு அதிக மயக்க மருந்து பயன்படுத்தியது மற்றும்  அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டதே  காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்