உடனடியாக போர் நிறுத்தம் தேவை..! ரஷ்யா அதிபர் புதினுடன் பிரதமர் மோடிபேச்சு
எந்த பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா போரை நடத்தக்கூடும் என்று முன்னரே இந்திய அதிகாரிகள் கணித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அங்கிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு தூதரகம் கேட்டுக் கொண்டது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்தியா - ரஷ்யா இடையே கடந்த சில தசாப்தங்களாக நல்லுறவு இருந்து வருகிறது. உக்ரைனும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வருவதால், இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்திருந்தனர்.
இந்த சூழலில் உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எந்த பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் தங்களது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் வழக்கமான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவார்கள் என்று ஒப்புக்கொண்டனர்.
உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் குறித்தும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உணர்த்தியதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் தொடர்பான சமீபத்திய நிலை குறித்து ரஷ்ய அதிபர் புதின் பிரதமருக்கு விளக்கினார். உடனடியாக போர் நிறுத்தம் தேவை.ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை, நேரடியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.