2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு - பிரதமர் மோடி பேச்சு
2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழி குடிநீரை கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் குறித்து இணையவழியிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுக்கான நமது உறுதிமொழிகள், அனைவரின் முயற்சியால் மட்டுமே நனவு ஆகும். ஒவ்வொரு தனிமனிதரும், பிரிவினரும், பிராந்தியமும் வளர்ச்சியின் முழுப்பலனையும் பெறும்போதுதான், அந்த முயற்சியை அனைவரும் செய்ய முடியும்.
அரசின் வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை நிறைவு செய்வதற்கான இலக்கை அடைவதற்கும், அடிப்படை வசதிகள் 100 சதவீத மக்களை சென்றடைவதற்கும் பட்ஜெட் தெளிவான ஒரு திட்ட வரைபடத்தை அளித்துள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, கிராமின் சதக் யோஜனா, ஜல்ஜீவன் மிஷன், வடகிழக்கு தொடர்பு, கிராமங்களில் பிராட்பேண்ட் இணையதள வசதி என ஒவ்வொரு திட்டத்துக்கும் பட்ஜெட்டில் அத்தியாவசியமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட துடிப்பான கிராம திட்டம், எல்லையோர கிராமங்களுக்கு முக்கியமானது. நாம் எல்லையோர கிராமங்களுக்கு சென்று, அங்கு ஒரு இரவைக்கழித்து, அதன் சுற்றுப்புறத்தை அனுபவிக்க வேண்டும். அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் அந்த பிராந்தியங்களுக்கு ஒரு துடிப்பு ஏற்படும்.
40 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனதால், கிராமங்களில் குடியிருப்புகள், நிலங்களை முறையாக வரையறுக்க ஸ்வாமித்வா திட்டம் உதவுகிறது.
வெவ்வேறு திட்டங்களும் 100 சதவீதம் சென்றடைவதற்கு, நாம் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் திட்டங்கள் வேகமாக செய்து முடிக்கப்படும், தரத்தில் சமரசம் செய்து கொள்ளப்படாது.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 4 கோடி குழாய்வழி குடிநீர்இணைப்புகள் இலக்காக உள்ளது. அதற்கான முயற்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் குழாய்களின் தரத்தையும், வழங்கப்பட உள்ள தண்ணீரின் தரத்தையும் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நீர் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழி குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.