நவாப் மாலிக்கிற்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவல் - கோர்ட்டு உத்தரவு
பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள நவாப் மாலிக்கை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
மும்பை,
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நவாப் மாலிக் வீட்டிற்கு இன்று காலை சென்ற அமலாக்கத்துறையினர் பணமோசடி புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். பல மணி நேர விசாரணைக்கு பின் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நவாப் மாலிக் பணமோசடி தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கை ஏற்ற சிறப்பு கோர்ட்டு, நவாப் மாலிக்கை மார்ச் 3-ம் தேதி வரை 8 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை காவலில் இருக்கும்போது நவாப் மாலிக் தனது மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், வீட்டில் இருந்து உணவை பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நவாப் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.