நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் அழைத்து வேலை கொடுப்போம்..! - மாயாவதி
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் அழைத்து வேலை கொடுப்போம் என்று மாயாவதி கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, நேற்று பரைச் நகரில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மாயாவதி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி, மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தபோது சாதியவாதத்துடன் செயல்பட்டது. தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு எதிராக செயல்பட்டது.
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கன்சிராம் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கவில்லை. மண்டல் கமிஷன் சிபாரிசுகளை கூட அமல்படுத்தவில்லை.
சமாஜ்வாடி கட்சி, ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட பிரிவினருக்காக இயங்கி வருகிறது. அதன் ஆட்சிக்காலத்தில், குண்டர்கள் மற்றும் கலவரக்காரர்கள் ஆதிக்கம் காணப்பட்டது. கலவரம் காரணமாக, எப்போதும் பதற்றமாக இருந்தது. நமது தலைவர்கள் பெயரில் இருந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை சமாஜ்வாடி ஆட்சி மாற்றியது.
பா.ஜனதாவும் சாதிய கட்சிதான். அது ஆர்.எஸ்.எஸ்.சால் இயக்கப்படுகிறது. தலித், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோருக்கான திட்டங்களை மூடுவிழா நடத்தியது. இடஒதுக்கீட்டு பலன்களை அளிக்கவில்லை. உத்தரபிரதேசத்தை பகுஜன் சமாஜ் கட்சி 4 தடவை ஆட்சி செய்தது. மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வேலை கிடைக்காததால், உத்தரபிரதேசத்தில் இருந்து வெளியேறியவர்களை திரும்ப அழைத்து வேலை கொடுப்போம்.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வாபஸ் பெறப்படும். குண்டர்கள், ஜெயிலில் தள்ளப்படுவார்கள்” என்று மாயாவதி கூறினார்.