இந்தியா-அமீரகம் இடையே ஒப்பந்தம்; 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்: மத்திய மந்திரி பேச்சு
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒப்பந்தத்தினால் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான (சி.இ.பி.ஏ.) பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இதற்காக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான காணொலி உச்சி மாநாடு இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி மற்றும் அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜையத் அல் நஹ்யான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரில் இருந்து 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும்.
இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, இரு நாடுகளும், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான (சி.இ.பி.ஏ.) பேச்சுவார்த்தையில் இன்று கையெழுத்திட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் நிறைவேற பல ஆண்டுகள் ஆக கூடிய சூழல் உள்ள நிலையில், 3 மாதங்களுக்குள் ஒரு முக்கிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முடிவை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
கொரோனா நெருக்கடியான சூழலில், இந்திய குடிமக்களை ஐக்கிய அரபு அமீரகம், அவர்களது நாட்டில் நன்றாக கவனித்து கொண்டது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் உருவான 50வது ஆண்டை நீங்கள் கொண்டாட உள்ளீர்கள். எங்களுடைய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாட்டத்தினை நாங்கள் தொடங்க இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தினால் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் பலனடையும்.
இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதனால், 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக வர்த்தகம் அதிகரிக்கும். அரசு தனது வேலையை செய்து விட்டது. இனி, தொழிற்சாலைகள் அதனை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.